திருவள்ளூர்
திருத்தணி அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் படுகாயம்
|திருத்தணி அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் தாடூர் ஊராட்சிக்கு உட்பட்ட இ.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் இந்திராணி (வயது 45). இவர் அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினர்களான ராதா (40), குமார் (42), ரமணி (35), ராணி (60), சந்தியா (30), கீர்த்தி (26) மற்றும் லட்சுமி (1) ஆகியோருடன் நேற்று திருத்தணி அடுத்த மத்தூர் மகிஷாசுரமர்த்தினி கோவிலுக்கு பஸ்சில் சென்றார்.
பொன்பாடி பஸ் நிலையத்தில் இவர்கள் அனைவரும் இறங்கி, அங்கிருந்து கோவிலுக்கு ஷேர் ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவை மத்தூர் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் ஓட்டி சென்றார். கோவிலுக்கு அருகே ஆட்டோ சென்றபோது, திடீரென சாலையில் குறுக்கே நாய் வந்ததால் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.