கரூர்
பிரேக் பிடிக்காததால் மின்கம்பங்கள் மீது மோதி ஷேர் ஆட்டோ
|கரூரில் பிரேக் பிடிக்காததால் மின்கம்பங்கள் மீது மோதி ஷேர் ஆட்டோவை நிறுத்திய டிரைவரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்.
மின்கம்பங்கள் மீது மோதிய ஷேர் ஆட்டோ
கரூர் தாந்தோணிமலை பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 30). ஷேர் ஆட்டோ டிரைவர். இவர் கரூரில் இருந்து தாந்தோணிமலை வழியாக பயணிகளை அழைத்து செல்லும் ஷேர் ஆட்டோவினை ஓட்டி வருகிறார். நேற்று வழக்கம்போல் தாந்தோணிமலையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, கரூர் நோக்கி வந்தார்.
அப்போது உழவர்சந்தை பகுதியில் வந்தபோது ஷேர் ஆட்டோவில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் மீது மோதாமல் இருக்க, சாலையோரத்தில் இருந்த மின்கம்பங்களுக்கு இடையே ஆட்டோவை மோதி சாமர்த்தியமாக ஆட்டோவை பிரபு நிறுத்தினார்.
பயணிகள் உயிர் தப்பினர்
இதையடுத்து உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து ஷேர் ஆட்டோ டிரைவர் பிரபு மற்றும் பயணிகளை உடனடியாக ஆட்டோவில் இருந்து வெளியேற்றினர். இதனால் ஆட்டோவில் பயணித்த பயணிகள் மற்றும் டிரைவர் பிரபு காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில் ஆட்டோவின் முன்பக்கம் மற்றும் மின்கம்பங்கள் சேதம் அடைந்தது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின்கம்பங்களை சரி செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.