< Back
மாநில செய்திகள்
சண்முகநாத சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்
அரியலூர்
மாநில செய்திகள்

சண்முகநாத சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
3 Sep 2023 6:30 PM GMT

வி.கைகாட்டியில் சண்முகநாத சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சண்முகநாத சுப்பிரமணியர் கோவில்

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி சீனிவாச நகரில் சண்முகநாத சுப்பிரமணியர் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் லெட்சுமி விநாயகர், சொர்ண ஆகர்ஷன பைரவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, மகா விஷ்ணு, வள்ளி-தெய்வானை சமேத சண்முகநாத சுப்பிரமணியர் ஆகிய தெய்வங்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 1-ந் தேதி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்க்ரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்பலங்காரம், கடஸ்தாபானம், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.

நேற்று முன்தினம் காலை விசேஷசாந்தி, கோபூஜை, யாகசாலை பூஜை, புதிய சிலைக்கு கண் திறத்தல், அஷ்டாதசகிரியை த்ரவ்யாஹீதி, பூர்ணாஹுதி, 2-ம் கால பூஜை ஆகியவை நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு கோபுர கலசம் வைத்தல், மங்கள இசை திருமுறை ஓதுதல், விசேஷ சந்தி, மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, யாக சாலை பூஜைகள் நடைபெற்று, யந்திர ஸ்தாபணம், மருந்து சாத்ததுல் உள்ளிட்ட பல்வேறு கால பூஜைகள் நடைபெற்றன.

கும்பாபிஷேகம்

நேற்று காலை நான்காம் கால யாக பூஜை, பிரம்பசுத்தி, ரக்ஷா பந்தனம், நாடிசந்தானம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணியளவில் மங்கள இசையுடன் ஊர் முக்கியஸ்தர்கள் கடம் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து காலை 11 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க யாகசாலையில் இருந்து கோவிலை சுற்றி கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலை சுற்றி நின்ற பொதுமக்கள் முருகனுக்கு அரோகரா என்ற கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மூலவர் சண்முகநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு மகாஅபிஷேகம், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் விளாங்குடி, அம்பாபூர், காவனூர், ஒரத்தூர், காத்தான்குடி காடு, மண்ணுழி, காட்டுப்பிரிங்கியம், ரெட்டிபாளையம், பெரியநாகலூர், குடிசல், தேளூர், முனியன்குறிச்சி, நாகமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் கயர்லாபாத் போலீசார் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) இரவு செந்தில் கணேஷ், ராஜலெட்சுமி குழுவினர் கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்