சங்கரன்கோவில்: தொழிலதிபர் வீட்டில் 53 சவரன் நகை, வைரம் திருட்டு - பணிப்பெண், அவரது கணவர் கைது
|தொழிலதிபர் வீட்டில் நகை திருடப்பட்ட வழக்கில் பணிப்பெண் மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த ரகுபதி என்ற தொழிலதிபர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பினார். குடும்ப உறுப்பினர்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றி பீரோவில் வைத்துவிட்டு சென்ற நிலையில், திரும்பி வந்து பார்த்த போது ஒரு வைரக்கம்மல், 53 சவரன் நகை மாயமானதைக் கண்டு ரகுபதி அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், ரகுபதியின் வீட்டில் பணிபுரிந்த மகேஸ்வரி என்ற பணிப்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், மகேஸ்வரியை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் நகைகள் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரிடம் இருந்து 53 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் துளசி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.