சிவகங்கை
பயன்பாடியின்றி பாழாகும் நிழற்குடைகள்
|காரைக்குடி பகுதியில் பயணிகள் நிழற்குடை பகுதியில் பஸ்களும் நிற்பதில்லை, பயணிகளுக்கும் உதவவில்லை என்ற நிலையில் எவ்வித பயன்பாடும் இன்றி பல்வேறு இடங்களில் பயணியர் நிழற்குடைகள் உள்ளது.
காரைக்குடி
காரைக்குடி பகுதியில் பயணிகள் நிழற்குடை பகுதியில் பஸ்களும் நிற்பதில்லை, பயணிகளுக்கும் உதவவில்லை என்ற நிலையில் எவ்வித பயன்பாடும் இன்றி பல்வேறு இடங்களில் பயணியர் நிழற்குடைகள் உள்ளது.
பயனின்றி நிழற்குடைகள்
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி நகர் வேகமாக வளர்ந்து நகராக மாறி வரும் வேளையில் மாநகராட்சி அந்தஸ்தை பெறும் நகராட்சியாகவும் உருவாகி வருகிறது. இதையடுத்து இந்த நகரின் அடிப்படை வசதிகளும் அதற்கேற்ப உயர்ந்து வருகிறது. அந்த வகையில் மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சினைகளும் ஏராளாமானதாக உள்ளது.
மக்களுக்கு தேவையான சுகாதாரம், குடிநீர், பொழுது போக்கு அம்சங்கள் உள்ளிட்டவைகளை வழங்குவது அரசின் முக்கிய கடமையாகும். தற்போது நகரில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடை பகுதியில் பஸ்கள் நிறுத்துவது இல்லை என்பதால் அந்த பயணிகள் நிழற்குடையில் பயணிகளும் காத்திருக்க முடியாத நிலை உள்ளது.
வெறிச்சோடி கிடக்கிறது
அவ்வாறாக காரைக்குடி எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் உள்ள பயணிகள் நிழற்குடை, அழகப்பா அறிவியல் ஆய்வு மையம் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை மற்றும் கோட்டையூரில் இருந்து பள்ளத்தூர் செல்லும் சாலையில் உள்ள பயணிகள் நிழற்குடை ஆகியவைகள் எவ்வித பயன்பாடும் இன்றி காணப்படுகிறது. அதிலும் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் உள்ள பயணியர் நிழற்குடை கடந்த 2015-ம் ஆண்டு கட்டப்பட்டு சுமார் 7 ஆண்டு வரை பயன்பாடின்றி அதில் பஸ்கள் நிறுத்தப்படாததால் அந்த பயணிகள் நிழற்குடையில் உள்ள இருக்கைகள் உடைந்தும், சில இடங்களில் இரவு நேரத்தில் மதுபிரியர்களின் கூடாரமாக உள்ளதால் ஆங்காங்கே காலி மதுபாட்டில்கள் கிடக்கும் நிலையும் காணப்படுகிறது.
மேலும் சில நாடோடிகள் இரவு நேரத்தில் அங்கேயே படுத்து தூங்கி அசுத்தம் செய்யும் இடமாக உள்ளதால் அங்கு மற்ற பயணிகள் வர அச்சமடைந்து பயன்பாடின்றி உள்ளது. இதேபோல் அழகப்பா அறிவியல் வளாகம் முன்பும் கடந்த 2015-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பயணிகள் நிழற்குடை முன்பு திருச்சி செல்லும் பஸ்கள் நிற்காததால் அந்த பஸ் நிலையம் வெறிச்சோடிய நிலையில் இரவு நேரங்களில் சிலர் அங்கேயே தங்கும் நிலையும் உள்ளது.
நடவடிக்கை வேண்டும்
இதேபோல் கோட்டையூர் செல்லும் பகுதியில் உள்ள இந்த நிழற்குடையும் கட்டப்பட்டு புதிய பொலிவுடன் காணப்பட்டாலும் அதில் போதிய பயணிகள் வராததால் வெறிச்சோடிய நிலை இருந்து வருகிறது. இந்த பயணிகள் நிழற்குடையை மீண்டும் சரி செய்து அந்த நிழற்குடை முன்பு அனைத்து பஸ்களும் நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்ததால் மட்டுமே மீண்டும் அந்த பயணிகள் நிழற்குடை செயல்படும் நிலை உள்ளது.
பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
காரைக்குடி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறும்போது-
முகமதுகனி(சமூக ஆர்வலர்): காரைக்குடி நகர் பகுதி பொதுமக்களின் தேவையை அறிந்து கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடைகள் பெரும்பாலும் பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதுதவிர தேவையான இடத்தில் பயணியர் நிழற்குடை இல்லாதது ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. அந்த வகையில் காரைக்குடி செஞ்சை பகுதியில் அமைக்கப்பட்ட கதர் பொருட்கள் விற்பனை மையம் முன்பு புதிய பயணிகள் நிழற்குடை மற்றும் கழனிவாசல் வாசலில் இருந்து தலைமை மருத்துவமனை செல்லும் சாலையில் பயணியர் நிழற்குடை இல்லாததால் மழை, வெயில் நேரங்களில் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்த இடங்களில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு வழங்கி உள்ளோம். இருப்பினும் கட்டிட பயன்பாடு இல்லாமல் உள்ள இந்த பயணிகள் நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வசதிகளை மேம்படுத்தலாம்
இளங்கோவன் (டீக்கடை நடத்துபவர் காரைக்குடி):
காரைக்குடி பகுதியில் சில இடங்களில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையானது பயன்பாடின்றி இரவு நேரத்தில் மது குடிப்பவர்களின் கூடாரமாக உள்ளது. இதை தடுத்து மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் பஸ்சிற்காக இங்கு வரும் பயணிகள் அமரும் வகையில் புதிய நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.