< Back
மாநில செய்திகள்
எஸ்.ஜி. சூர்யா கைது விவகாரம்: நிர்மலா சீதாராமன் விமர்சனத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி. பதிலடி
மாநில செய்திகள்

எஸ்.ஜி. சூர்யா கைது விவகாரம்: நிர்மலா சீதாராமன் விமர்சனத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி. பதிலடி

தினத்தந்தி
|
17 Jun 2023 9:52 PM IST

வதந்தியால் உருவாக்கப்பட்ட செய்தியை சுற்றுக்கு விடுவது சமூகப் பதற்றத்தை உருவாக்கும் என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரை,

தமிழ்நாடு பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன் தனது டுவிட்டர் பக்கத்தில் மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசனை விமர்சித்து கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய மதுரை போலீசார், நேற்று பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர். இந்த வழக்கில் பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து மதுரை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராம்சங்கரன் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து போலீசார், எஸ்.ஜி.சூர்யாவை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மலக்குழி மரணங்களின் மீது முதல்-அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் அதைப்பற்றி கேள்வி எழுப்பிய எஸ்.ஜி.சூர்யாவை தண்டிக்க முயற்சி எடுப்பது நியாயமா? தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டின் இரட்டை வேட நிலைப்பாடு, அதுவும் முக்கியமான சமூகப் பிரச்சினையில், வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பா.ஜ.க. தொண்டர்கள் அனைவரும் மனம் தளராமல் சட்ட ரீதியாக இதனை எதிர்த்து போராடுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், பொய்யை பரப்புகிற நபருக்கு மத்திய மந்திரிகள் வக்காலத்து வாங்குவதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

"ஒரு பொய்யை உண்மையாக்க ஒன்றிய நிதியமைச்சர், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் என எல்லோரும் களம் இறங்கி உள்ளனர். மலக்குழி மரணங்களுக்கு எதிராக பிணவறைகள் முன்பும், காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு கோரியும் தொடர்ந்து களம் காண்கிற அமைப்பு மார்க்சிஸ்ட் கட்சி.

மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கொடுமைக்கு முடிவு கட்ட இயந்திர பயன்பாட்டைக் கொண்டுவர என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டிய மத்திய அரசின் முக்கியத் துறை அமைச்சர்கள் சமூக வலைதளத்தில் பொய்யை, பீதியை பரப்புகிற ஒருவருக்காக இவ்வளவு அக்கறை எடுத்து, நேரம் செலவழித்து வக்காலத்து வாங்குவது உண்மைக்கும் இவர்களது அரசியல் நோக்கத்துக்கும் எவ்வளவு பெரிய இடைவெளி உள்ளது என்பதையே காட்டுகிறது.

பிரச்சினை என்ன? - "மதுரை மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் என்ற பேரூராட்சியில் மலக்குழி மரணம் நிகழ்ந்தது. கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் நிகழ்ந்தது. சு.வெங்கடேசன் எம்.பி. கள்ளமெளனம் காக்கிறார்" என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஒரு நிதி மந்திரிக்கு அப்படி ஒரு பேரூராட்சி மதுரை மாவட்டத்தில் இருக்கிறதா என்று கூட பார்த்து விட்டு கருத்துக் கூற முடியாதா? இன்னொருவர் தகவல் தொழில் நுட்ப மந்திரி. அந்த இலாகாவை "பொய் மற்றும் அவதூறு தகவல் தொழில் நுட்ப மந்திரி" என்று மாற்றி விடலாமா?

முழுவதும் வதந்தியால் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செய்தியை சுற்றுக்கு விடுவது சமூகப் பதற்றத்தை உருவாக்கும் என்பதுதான் பிரச்சினை. ஆகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் கொடுத்தது.

இதில் வேடிக்கை என்னவெனில், கருத்து சுதந்திரம் பற்றி மத்திய மந்திர்கள் பேசி இருப்பதுதான். உலகில் "இணையதள முடக்கம்" செய்வதில் ஐந்து ஆண்டுகளாக முதல் இடத்தில் இந்தியாவை வைத்திருப்பவர்கள். கோவிந்த பன்சாரே, கௌரி லங்கேஷ் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் மிதந்தபோதெல்லாம் கருத்து சுதந்திரம் பற்றி கவலைப் படாதவர்கள் ஒரு போலிச் செய்தி நபருக்கு ஆதரவாக வருவதுதான் நகை முரண். பொய் உங்கள் ஆயுதம். உண்மையே என்றும் எங்களின் கவசம்."

இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்