மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை: பிரிஜ்பூஷன் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? – சீமான் கேள்வி
|மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பிரிஜ்பூஷன் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது விரைந்து சட்ட நடவடிக்கை எடுத்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டில் உரியச் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் வீதியில் இறங்கிப் போராடி வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. விசாரணைக்குழு அறிக்கை வெளியான பிறகும், பிரிஜ்பூஷன் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கும் டெல்லி காவல்துறையின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
நாட்டிற்காக விளையாடி புகழை ஈட்டித் தந்த மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து உலக அரங்கில் இந்தியாவிற்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சரண்சிங் மீது, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க துணிவின்றி, போராடும் மல்யுத்த வீராங்கனைகளால் நாட்டிற்குத் தலைகுனிவு ஏற்படுவதாக, இந்திய ஒலிம்பிக் சம்மேளனத் தலைவர் பி.டி.உஷா கூறுவது வெட்கக்கேடானது.
இதன் மூலம் பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்கவே பாஜக விரும்புகிறது என்பது உறுதிப்பட்டுள்ளது. நாடெங்கிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகிவரும் நிலையில், காஷ்மீர் மண்ணின் மகள் ஆசிஃபா முதல் தற்போது மல்யுத்த வீராங்கனைகள் வரை ஒவ்வொரு முறையும் பாஜகவினர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழும்போதும் அவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாக்க ஆட்சி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை பாஜக வழக்கமாக கொண்டுள்ளது. பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதுதான் பாஜகவின் பண்பாடா? நாட்டிற்காக விளையாடிய வீராங்கனைகளை நீதிகேட்டு வீதியில் இறங்கிப் போராட வைத்திருப்பதுதான் பாஜக கூறும் தேசபக்தியா?
ஆகவே, பண்பாடு, கலாச்சாரம், தேசபக்தி என்று பாஜக மற்றவர்களுக்குப் பாடமெடுப்பதை விடுத்து, பாலியல் குற்றவாளி பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது விரைந்து சட்ட நடவடிக்கை எடுத்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.