பெண்ணுக்கு பாலியல் தொல்லை; மதபோதகர் கைது
|பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மதபோதகரை போலீசார் கைதுசெய்தனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை அருகே திருவாளப்புத்தூர் புத்தகரம் மேலத்தெருவை சேர்ந்தவர் பிலிப் விஜயேந்திரன் என்கிற விஜயேந்திரன்(வயது 58). இவர், அந்த பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபையில் மதபோதகராக உள்ளார். இவரது சபைக்கு வந்து செல்லும் 38 வயது நிரம்பிய ஒரு பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆகையால் அவரது காலில் அடிக்கடி வலி ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சபைக்கு வந்த அந்த பெண் தனது காலில் வலி அதிகமாக உள்ளதாக மதபோதகர் பிலிப் விஜயேந்திரனிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் வலி நிவாரணி எண்ணெய் தேய்த்தால் சரியாகி விடும் என்று கூறி வீட்டிற்குள் அழைத்துள்ளார்.
வீட்டிற்குள் அந்த பெண் சென்றவுடன் வீட்டின் கதவை பூட்டிய விஜயேந்திரன் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், நடந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகவல்லி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை முடிவில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்து விஜயேந்திரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.