தஞ்சாவூர்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
|சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலம் முதலியார் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது60). இவர் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி 12 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்தார். அவரிடம் இருந்து தப்பி வந்த அந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த விவரத்தை தெரிவித்தார்.
இது குறித்து சிறுமியின் தாயார் பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பகவதி சரணம் சாட்சிகளிடம் விசாரணை செய்து முருகானந்தத்தை கைது செய்தார். பின்னர் தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் முருகானந்தம் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
7 ஆண்டுகள் சிறை
பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி சுந்தரராஜன் விசாரித்து முருகானந்தத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.