திருச்சி
சிறுமிக்கு பாலியல் தொல்லை: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
|சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் திருப்பூரை சேர்ந்த சசிகுமார் (வயது 28). புதுக்கோட்டை மாவட்டம், ராஜகோபாலபுரத்தை சேர்ந்த சங்கர் ராஜபாண்டியன் (32) திருவெறும்பூர் நெடுஞ்சாலை ரோந்து பிரிவிலும், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த பிரசாத் (26) நவல்பட்டு போலீஸ் நிலையத்திலும், சித்தார்த்தன் (30) ஜீயபுரம் போக்குவரத்து போலீஸ் நிலையத்திலும் போலீசாராக பணியாற்றி வந்தனர். கடந்த 4-ந்தேதி இவர்கள் 4 பேரும் காரில் முக்கொம்பு சுற்றுலாத்தலத்துக்கு சாதாரண உடையில் சென்று மது அருந்திவிட்டு காவிரி ஆற்றில் குளித்தனர். பின்னர் மதுபோதையில் முக்கொம்பு பூங்காவை சுற்றி வந்த அவர்கள், அங்கு தனிமையில் உட்கார்ந்து இருந்த காதல் ஜோடியை வம்புக்கு இழுத்துள்ளனர். மேலும், துவாக்குடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்து, வீடியோ எடுத்து மிரட்டினர். அத்துடன் சிறுமியின் காதலனை அடித்து துன்புறுத்தினர்.
காவலில் எடுத்து விசாரணை
இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசாரும் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறையில் உள்ள 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீவத்சன், அவர்களை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.