மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
|மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஒலையனூரில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக (பொறுப்பு) பணியாற்றி வந்த ஆர்.ஆர்.குப்பத்தை சேர்ந்த துரையரசன் என்பவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தனது செல்போனில் உள்ள ஆபாச வீடியோக்களை காண்பித்ததாகவும், சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து துரையரசனை கைது செய்தனர். இதுபற்றி அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தாமரை மணாளன், பள்ளியின் தலைமை ஆசிரியர் துரையரசனை துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டுள்ளார்.