< Back
மாநில செய்திகள்
பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு; போலீஸ் இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு; போலீஸ் இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்

தினத்தந்தி
|
10 Feb 2023 7:00 PM GMT

பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரகாந்தியை பணிநீக்கம் செய்து, திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அபினவ்குமார் அதிரடியாக உத்தரவிட்டார்.

பாலியல் புகார்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வசித்து வருபவர் வீரகாந்தி (வயது 59). இவர் கடந்த 2021-ம் ஆண்டு பழனியை அடுத்த கீரனூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். அப்போது பெண் போலீஸ் ஒருவருக்கு, அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வீரகாந்தி உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

மேலும் அது தொடர்பாக விசாரணை நடத்தும்படி அப்போதைய திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி உத்தரவிட்டார். அதன்பேரில் பாதிக்கப்பட்ட பெண் போலீசிடம் புகார் பெறப்பட்டு விசாரணை தொடங்கியது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் வீரகாந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா தலைமையிலான விசாகா கமிட்டி, இன்ஸ்பெக்டர் வீரகாந்தி மீதான பாலியல் புகாரை விசாரித்தது.

இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்

இதையொட்டி இன்ஸ்பெக்டர் வீரகாந்தி, பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் உள்ளிட்டோரிடம் விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது. மேலும் செல்போனில் உரையாடல் பதிவு, குறுந்தகவல் உள்ளிட்ட ஆதாரங்களின் உண்மை தன்மை ஆய்வு செய்யப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் மீதான பாலியல் புகார் உண்மை என தெரியவந்தது.

இதுதொடர்பாக அரசுக்கு, விசாகா கமிட்டியின் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அபினவ்குமார், நேற்று இன்ஸ்பெக்டர் வீரகாந்தியை அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்