பாலியல் தொல்லை கொடுத்து கொடூரம்: கிணற்றில் தள்ளி சிறுவன் கொலை - பிளஸ்-2 மாணவன் வெறிச்செயல்
|ஓரினசேர்க்கையை வெளியே சொல்லி விடுவான் என பயந்து சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்த பிளஸ்-2 மாணவனை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு 10 வயதில் மகன் இருந்தான். இவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது சிறுவன் கோவிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்திருந்தான்.
இதற்கிடையே நேற்று முன்தினம் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் மகனை கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர் அதியமான்கோட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை பார்வையிட்டனர்.
அதில் அதே கிராமத்தை சேர்ந்த 18 வயதுடைய பிளஸ்-2 மாணவர் சிறுவனிடம் மாங்காய் பறித்து வரலாம் எனக்கூறி கிராமத்தின் ஒதுக்குப்புறமாக உள்ள விவசாய நிலத்துக்கு சிறுவனை அழைத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவன் இல்லாமல் பிளஸ்-2 மாணவன் மட்டும் தனியாக நடந்து வரும் காட்சி அந்த கேமராவில் பதிவாகி இருந்தது.
இந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு பிளஸ்-2 மாணவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. போலீசாரிடம் பிளஸ்-2 மாணவன் அளித்துள்ள வாக்குமூலத்தில், "5-ம் வகுப்பு படிக்கும் சிறுவனுடன் ஓரினசேர்க்கையில் ஈடுபட வேண்டும் என ஆசை வந்தது. இதனால் சிறுவனின் நடவடிக்கையை கண்காணித்தேன். இதனைத் தொடர்ந்து தனியாக விளையாடி கொண்டிருந்த சிறுவனை மாங்காய் பறிக்கலாம் வா எனக்கூறி ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள பகுதிக்கு அழைத்து சென்றேன். பின்னர் சிறுவனை கட்டாயப்படுத்தி ஓரினசேர்க்கையில் ஈடுபட்டேன்.
இதையடுத்து சிறுவன் இங்கு நடந்ததை பெற்றோர் மற்றும் ஊரில் உள்ளவர்களிடம் கூறிவிடுவேன் என தெரிவித்தான். யாரிடமும் சொல்லக்கூடாது என கண்டித்தேன். ஆனாலும் எனது பேச்சை கேட்காமல் சிறுவன் கூறிவிடுவேன் என்றான். இதனால் வெளியில் சொல்லிவிடுவான் என பயந்து அப்பகுதியில் உள்ள கிணற்றில் அவனை தள்ளிவிட்டு வந்துவிட்டேன்" என்று அதில் கூறியுள்ளான்.
இதைத்தொடர்ந்து போலீசார், தர்மபுரி தீயணைப்பு படையினரின் உதவியோடு பிளஸ்-2 மாணவருடன் கிணற்று பகுதிக்கு சென்றனர். இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இறங்கி சிறுவனை தேடினர். சுமார் 2 மணி நேர தேடலுக்கு பின் நேற்று இறந்த நிலையில் சிறுவனின் உடலை மேலே கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் பிளஸ்-2 மாணவன் மீது போக்சோ மற்றும் கொலை வழக்குப்பதிந்து அவனை கைது செய்தனர். பின்னர் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஓரினசேர்க்கையில் ஈடுபட்ட சிறுவனை பிளஸ்-2 மாணவன் கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.