பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி - மாநில கல்வி கொள்கை உருவாக்க குழு தலைவர் முருகேசன் தகவல்
|பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில கல்வி கொள்கை உருவாக்க குழு தலைவர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க, ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட மாநில கல்வி கொள்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் பல்வேறு பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழு சார்பில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் மாநில கல்வி கொள்கை தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு அனைவரின் கருத்துக்களும் பெறப்பட்டன.
இந்த நிலையில் சென்னையில் மாநில கல்வி கொள்கை உருவாக்க குழு தலைவர் முருகேசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் மாநில கல்வி கொள்கையில் பாலியல் கல்வி இடம்பெறுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், கருத்துக் கேட்பு கூட்டங்களில் மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பெரும்பாலானோர் பாலியல் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியதாகவும், அதனை பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளதாகவும் கூறினார். எனவே இதனை பரிசீலனை செய்து மாநில கல்வி கொள்கையில் பாலியல் கல்வியை இடம்பெறச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.