கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார்: குற்றவாளிகள் மீதான தண்டனையை விரைவில் உறுதிப்படுத்த வேண்டும் - கி.வீரமணி
|கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகாரில் குற்றவாளிகள் மீதான தண்டனையை விரைவில் உறுதிப்படுத்த வேண்டும் என கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார்கள் எழுந்திருக்கும் நிலையில், மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்திடம் மாணவிகள் புகார் அளித்துள்ளனர். குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் மற்றும் உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத், சஞ்ஜித்லால் ஆகிய 4 பேர் மீது மாணவிகள் புகார் கொடுத்திருந்தும், ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே மகளிர் ஆணையம், கலாஷேத்ரா இயக்குனர் ரேவதியிடம் விசாரணை நடத்தியது.
விசாரணை மேலோட்டமாகவே இருக்கிறது. எனவே தாமதத்துக்கு இடமின்றி சட்டம் கடமையை செய்யவேண்டும். குற்றவாளிகள் மீதான தண்டனையை விரைவில் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.