நீலகிரி
மாற்றுத்திறனாளிகள் 9 பேருக்கு தையல் எந்திரங்கள்
|கோத்தகிரியில் மாற்றுத்திறனாளிகள் 9 பேருக்கு தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி தலைமை தாங்கினார். மகளிர் திட்ட அலுவலர் வனிதா, துணை தாசில்தார் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் தீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மாற்றுத்திறனாளிகள் 9 பேருக்கு தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து எலும்பு சிகிச்சை டாக்டர் வினோத், காது, மூக்கு, தொண்டை டாக்டர் நாகராஜ், கண் சிகிச்சை டாக்டர் நித்யா ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்து, ஊனத்தின் சதவீதத்தை பரிசோதனை செய்தனர். இதையடுத்து புதிதாக பதிவு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. முகாமில் அரசின் சலுகைகள், தொழில் தொடங்க வங்கிக்கடன் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் விளக்கினர். முகாம் தாசில்தார் அலுவலக 3-வது தளத்தில் நடந்தது. இதில் கலந்துக்கொள்வதற்காக மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டுகள் வழியாக மிகவும் சிரமத்துடன் ஊன்றுகோலை ஊன்றியபடி ஏறினர். எனவே, மாற்றுத்திறனாளிகள் எளிதில் செல்லும் வகையில் முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.