< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் நகராட்சியில்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களின் ஆதரவோடு அமைக்கப்படும்அமைச்சர் பொன்முடி பேட்டி
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் நகராட்சியில்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களின் ஆதரவோடு அமைக்கப்படும்அமைச்சர் பொன்முடி பேட்டி

தினத்தந்தி
|
30 April 2023 12:15 AM IST

விழுப்புரம் நகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களின் ஆதரவோடு அமைக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி பேட்டி தொிவித்தாா்.


விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலாமேடு மற்றும் மின்வாரிய காலனி ஆகிய பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் குறித்து நேற்று காலை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் நகராட்சியில் புதியதாக இணைக்கப்பட்ட 5 ஊராட்சி பகுதிகளில் ரூ.263 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளில் சில இடர்பாடுகள் ஏற்பட்டது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்தபோது அரசுத்துறை அலுவலர்களுடன் கலந்துரையாடி பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார். அந்த வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவரின் ஒத்துழைப்போடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றார்.இதனை தொடர்ந்து விழுப்புரம் அண்ணாமலை பல்கலைக்கழக இடைநிலை விரிவாக்க கல்வி மையத்தில் அமைச்சர் க.பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் வர இருக்கின்ற கல்வியாண்டில் 13 பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான தேர்வுமுறை, ஒரே மாதிரியான கட்டணம், அதுபோல் பணியாளர்கள் நியமனத்திலும் ஒரே மாதிரியாக நியமிக்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் அவை செயல்படுத்தப்படும் என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சி.பழனி, எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அன்பழகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்