< Back
மாநில செய்திகள்
கழிவுநீர் உறிஞ்சும் வாகன உரிமையாளர்கள் போராட்டம்
திருச்சி
மாநில செய்திகள்

கழிவுநீர் உறிஞ்சும் வாகன உரிமையாளர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
23 April 2023 3:10 AM IST

கழிவுநீர் உறிஞ்சும் வாகன உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாநகரில் 60-க்கும் மேற்பட்ட தனியார் கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள் இயங்கி வருகின்றன. மாநகர பகுதியில் மருத்துவமனைகள், ஓட்டல்கள், வீடுகள் போன்றவற்றில் வாடகை அடிப்படையில் இந்த வாகனங்கள் கழிவுநீரை உறிஞ்சி அகற்றி வருகின்றன. இவ்வாறு இந்த வாகனங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரானது சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள தொட்டியில் கொட்டப்படுவது வழக்கம். இதற்காக ஒரு வாகனத்துக்கு ரூ.30 கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.

கடந்த சில வாரங்களாக 6 ஆயிரம் லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட வாகனத்துக்கு ரூ.200-ம், அதற்கு மேல் கொள்ளளவு கொண்ட வாகனங்களுக்கு ரூ.300-ம் கட்டணமாக செலுத்தும்படி மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டணம் அதிகம் என்பதால் கழிவுநீர் உறிஞ்சும் வாகன உரிமையாளர்கள் அவற்றை செலுத்த மறுத்ததுடன், கட்டணத்தை குறைக்கும்படி மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் கழிவுநீர் கொட்டுவதற்காக வந்த வாகனங்களை சுத்திகரிப்பு நிலையத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் அவை சாலையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் சுத்திகரிப்பு நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுபற்றி தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து கழிவுநீர் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டன. 2 நாட்களில் கட்டண பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் கழிவுநீர் வாகனங்கள் அனைத்தையும் திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்