மயிலாடுதுறை
சத்தியவாணன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்
|மயிலாடுதுறையில் உள்ள சத்தியவாணன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் உள்ள சத்தியவாணன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியவாணன் வாய்க்கால்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆக்கூர் பகுதியைச் சேர்ந்த வக்கீல் சங்கர் தலைமையில் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து பழமை வாய்ந்த சத்தியவாணன் வாய்க்கால் மன்னம்பந்தல், ஆறுபாதி, விளநகர், பரசலூர், காளகஸ்தினாபுரம், மடப்புரம், ஆக்கூர், மருதம்பள்ளம் ஆகிய ஊர்களை கடந்து சின்னங்குடி அருகே கடலில் கலக்கிறது. இந்த வாய்க்கால் கடந்த நூறு ஆண்டுகளுக்கு இந்த பகுதியில் உள்ள சாகுபடி நிலங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்தது மட்டுமின்றி நிலத்தடி நீரையும் குறையாமல் பாதுகாத்ததில் பெரும் பங்கு வகித்து வந்தது. மேலும் சத்தியவாணன் வாய்க்கால் பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட குளங்களின் நீர் ஆதராமாகவும் விளங்கியது. இந்த சத்தியவாணன் வாய்க்காலில் கெண்டை, கெளுத்தி, விறால், குறவை, சென்னல், சிலேப்பி போன்ற இன்னும் சிறிய வகை மீன் இனங்கள் நிரம்பி இருந்தன.
மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்
தற்போது இந்த சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி அருகே மயிலாடுதுறை நகராட்சியால் பராமரிக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ரசாயன கழிவுகளோடு கழிவுநீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் வாய்க்கால் சாக்கடை போல் காட்சிகளிப்பதுடன் அதில் மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்ற சூழல் நிலவுகிறது.
இதனால் கண்ணுக்கெதிராக சத்தியவாணன் வாய்க்காலின் மரணத்தை நேரடியாக பார்க்கவேண்டிய சூழல் தரங்கம்பாடி தாலுக்காவில் வசிக்கும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுபுறசூழல் சீர்க்கேடு மற்றும் தண்ணீர் மாசு புவியியல் மாறுபாட்டை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தடுக்காவிட்டால் வருங்காலங்களில் மேற்கண்ட ரசாயன சாக்கடை கழிவால் சத்தியவாணன் வாய்க்கால் பயணிக்கும் பஞ்சாயத்துக்களில் உள்ள தரங்கம்பாடி தாலுக்காவில் பெரிய சுற்றுபுறசூழல் மாசு ஏற்படும். எனவே உடனடியாக சத்தியவாணன் வாய்க்காலை பார்வையிட்டு அதிலுள்ள தண்ணீரை ஆய்வுக்குட்படுத்தியும், மயிலாடுதுறை நகராட்சியின் கழிவு நீர் சத்தியவாணன் வாய்க்காலில் கலக்காமல் தடுத்து, மீண்டும் சத்தியவாணன் வாய்க்காலை தூய்மைப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.