பாளையங்கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்; மேயரிடம், தன்னார்வலர்கள் மனு
|பாளையங்கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என மேயரிடம், தன்னார்வலர்கள் மனு கொடுத்தனர்.
மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சமூகநல தன்னார்வலர்கள் மேயரிடம் மனு வழங்கினர். அதில், ''பாளையங்கால்வாயில் மேலப்பாளையம் மண்டல பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடைகளில் வருகின்ற கழிவுநீர் மற்றும் மனித கழிவுகள் நேரடியாக கலக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பாளையங்கால்வாயில் கழிவுநீர், மனித கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்'' என்று கூறியுள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, சிராஜ் என்பவர் சைக்கிளில் வந்து மனு வழங்கினார்.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்டின்ராயன் வழங்கிய மனுவில், நெல்லை மாநகரப்பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். கால்வாய்களை முறையாக பராமரிக்க வேண்டும். அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும். பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை சரிந்து சேதமடைந்தது. அதை கட்டிய கட்டுமான நிறுவனத்தின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தேன். அந்த மனு மீது இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதேபோன்று பொதுமக்கள் சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட வசதி கேட்டு மனு கொடுத்தனர்.