தஞ்சாவூர்
சாலையில் பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீர்
|சாலையில் பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீர்
தஞ்சை தெற்கு போலீஸ் நிலையம் அருகே சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
சீரமைப்பு பணி
தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை குழிகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக தெற்குவீதி, மேல வீதி, கீழராஜவீதி, கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும், அந்த பகுதிகளில் வடிகால் அமைக்கும் பணிகள், பாதாள சாக்கடை குழிகளை மறுசீரமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
இதன்காரணமாக மாநகராட்சியின் மற்ற பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை குழிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுவது தொடர்கதையாக உள்ளது. அதிகாரிகள் ஒரு பகுதியில் வெளியேறும் கழிவுநீரை தடுத்து நிறுத்தினால், மற்றொரு பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது.
பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீர்
தஞ்சை தெற்கு போலீஸ் நிலையம் அருகே சாலை நடுவே பாதாள சாக்கடை குழி ஒன்று உள்ளது. இந்த பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம், மகளிர் போலீஸ் நிலையம், நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் உள்ளன. இதன் காரணமாக அந்த சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக விளங்குகிறது.
இந்த நிலையில் நேற்று சாலை நடுவே இருந்த பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியதால் வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி சென்றனர். மேலும், வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் என அச்சம் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீரால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.