< Back
மாநில செய்திகள்
ரெட்டேரியில் கழிவுநீர் கலப்பதால் முதல்-அமைச்சர் தொகுதி மக்களுக்கு பேராபத்து - பி.ஆர்.பாண்டியன் பேட்டி
சென்னை
மாநில செய்திகள்

ரெட்டேரியில் கழிவுநீர் கலப்பதால் முதல்-அமைச்சர் தொகுதி மக்களுக்கு பேராபத்து - பி.ஆர்.பாண்டியன் பேட்டி

தினத்தந்தி
|
20 Aug 2023 3:06 PM IST

கொரட்டூர் ஏரியில் இருந்து ரெட்டேரியில் கழிவுநீர் கலப்பதால் முதல்-அமைச்சர் தொகுதி மக்களுக்கு பேராபத்து ஏற்படும் என பி.ஆர்.பாண்டியன் பேட்டியளித்தார்.

சென்னை,

சென்னை கொரட்டூர் ஏரியை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று பார்வையிட்டு கழிவுநீர் கலப்பதை ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் கொரட்டூர் ஏரி முழுமையும் கழிவு நீர் நிரம்பியுள்ளது. இந்த கழிவுநீர் முழுமையும் வடிகால் வழியாக ரெட்டேரியில் கலப்பதால் அதனை குடிநீராக பயன்படுத்தும் முதல்-அமைச்சர் தொகுதியான கொளத்தூர் தொகுதி மக்கள் மிகுந்த பேராபத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏரியில் கலக்கும் கழிவுநீரை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இப்பகுதி மக்கள் தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் 2020-ம் ஆண்டு தலைமைச்செயலாளர் தலைமையில் 19 துறைகளின் உயர் அதிகாரிகள் கொண்ட ஆய்வுக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளனர்.

அந்த குழு அவ்வப்போது ஆய்வு செய்து தீர்ப்பாயத்துக்கு கழிவுநீரை தடுப்பதற்கான தொடர் நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். கழிவுநீர் கலப்பதை முற்றிலும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். ஆனால் நீதிமன்ற உத்தரவு இதுவரையிலும் பின்பற்றப்படவில்லை. முதல்-அமைச்சர் தொகுதிக்கு இந்த ஏரியின் மூலம் செல்லக்கூடிய கழிவுநீர் தான் குடிநீராக பயன்படுத்தக்கூடிய பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறபோது முதல்-அமைச்சர் அவசரகால நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். இதனை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை (இன்று) இந்த பகுதி மக்கள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டமும் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, சென்னை மண்டல தலைவர் சைதை சிவா உடன் இருந்தார். இதற்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர்கள் சேகரன், சுந்தரமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்