குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய விவகாரம்: குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைப்பு
|புதுக்கோட்டை இறையூரில் குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய சம்பவத்தில் குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை இறையூரில், ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுநீர் கலக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த தண்ணீரை குடித்த பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அந்தப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள அய்யனார் கோவிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாடு உரிமை மறுக்கப்பட்ட விவகாரம், இரட்டைக்குவளை முறை வழக்கத்தில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஆதிதிராவிட மக்களை அழைத்து கோவிலில் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுத்தார். மேலும், இரட்டை குவளை முறையை பின்பற்றிய டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, இறையூர் கிராமத்தை சேர்ந்த 3 சமுதாய மக்களிடையே பிரச்சினை ஏற்படாமல் இருக்க சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில் பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது, தேநீர் கடையில் இரட்டை குவளை முறை பின்பற்றப்பட்டு இருந்தால் இனி அவ்வாறு செயல்படுத்தக்கூடாது. அதேபோல் அந்த பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் 3 சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வழிபாடு நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய குற்றவாளியை பிடிக்க 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி டிஐஜி சரவணா சுந்தர் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தனிப்படை ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் இறையூர் கிராமத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.