சென்னை
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கழிவுநீர் தேக்கத்தால் நோய்கள் பரவும் அபாயம் - நோயாளிகள் அவதி
|சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
தமிழகத்தில் மிகப்பெரிய ஆஸ்பத்திரியாக விளங்கும் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிற மாநிலத்தவர்களும் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாள் தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாகவும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளியாகவும் சிகிச்சை பெறுகிறார்கள்.ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். டவர்-1, டவர்-2, டவர்-3 என 3 மிகப்பெரிய கட்டிடங்கள் இங்கு உள்ளது. இவ்வளவு சிறப்பு மிக்க இந்த ஆஸ்பத்திரியில் சுகாதாரம் ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஆஸ்பத்திரியை சுற்றி பல்வேறு இடங்களில் கழிவுநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது.
நோயாளிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆஸ்பத்திரியில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது. ஆனால், ஆஸ்பத்திரி நுழைவு வாயிலில் உள்ள தொட்டி மற்றும் டவர்-3-க்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
பிணவறை செல்லும் வழியில் உள்ள குடிநீர் தொட்டியும், நுண்வழி அறுவை சிகிச்சை துறைக்கு செல்லும் வழியில் உள்ள பெரிய குடிநீர் தொட்டிகள் பயன்பாடு இல்லாமல் கிடக்கிறது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் குடிக்க தண்ணீர் இல்லாமல் திண்டாடுகிறார்கள்.
ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள நர்சிங் கல்லூரி அருகில் 2 பக்கமும் கழிவுநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. கழிவுநீர் பல மாதங்களாக தேங்கி கிடப்பதாகவும், டெங்கு கொசு உற்பத்திக்கு முக்கிய காரணமாக இது உள்ளதாகவும் நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆஸ்பத்திரி வளாகத்துக்கு உள்ளே பல்வேறு பகுதிகளில் கழிவுகள் பைகளில் கொட்டப்பட்டு ஆங்காங்கே போடப்பட்டுள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் நோயாளிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். டவர்-2-க்கு பின்புற பகுதியில் கூடுதலாக திறக்கப்பட்ட 2 ஆண்கள் கழிவறை மூடப்பட்டு கிடக்கிறது. ஆசியாவிலேயே மிகச் சிறப்பு வாய்ந்த ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் காணப்படும் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, நோயாளிகள் கூறியதாவது:-
வார்டில் மூட்டைப்பூச்சி தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் தூக்கம் கெட்டு விடுகிறது. அவசர சிகிச்சை பிரிவுகளில் 24 மணி நேரமும் டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளிக்கிறார்கள். ஆனால், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பின்னர் டாக்டர்கள் சரிவர கவனிப்பது கிடையாது.
ஆஸ்பத்திரி வளாகத்தை சுற்றி கழிவுகள் ஆங்காங்கே மூட்டை முடிச்சுகளாக கிடக்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பல இடங்களில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் துர்நாற்றமும், கொசு உற்பத்தியும் அதிகரிக்கிறது. இதனால், டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே. மருத்துவத்துறை இதில் தனி கவனம் செலுத்தி பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.