< Back
மாநில செய்திகள்
தமிழகத்தின் வளர்ச்சிக்குசேது சமுத்திர திட்டத்தை நிச்சயம்நிறைவேற்றியே தீர வேண்டும்
தர்மபுரி
மாநில செய்திகள்

தமிழகத்தின் வளர்ச்சிக்குசேது சமுத்திர திட்டத்தை நிச்சயம்நிறைவேற்றியே தீர வேண்டும்

தினத்தந்தி
|
20 Feb 2023 12:31 AM IST

தமிழகத்தின் வளர்ச்சிக்கு சேது சமுத்திர திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றியே தீர வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.

பிரசார பொதுக்கூட்டம்

தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் ஆட்சி விளக்க பிரசார பொதுக்கூட்டம் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் நேற்று இரவு நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிவாஜி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழ் பிரபாகரன் வரவேற்று பேசினார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் கதிர் செந்தில்குமார், மண்டல தலைவர் விடுதலை தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்த்தகிரி, கதிர், வேட்ராயன், நகரத் தலைவர் கருபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. இதன் மூலம் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக பெண்கள் அதிகாரத்துக்கு வர வேண்டும். சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து

மத்திய அரசின் நடவடிக்கைகளால் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு சேது சமுத்திர திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றியே தீர வேண்டும். இந்தத் திட்டம் நிறைவேற்றினால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஆனால் மூடநம்பிக்கை காரணமாக அந்தத் திட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்க நினைக்கிறார்கள். தடைகளைத் தாண்டி இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்களில் திராவிட கழகம் முக்கிய அங்கம் வகிக்கிறது. நாங்கள் ஒரு திட்டத்தை கையில் எடுத்தால் அதனை நிறைவேற்றாமல் விட மாட்டோம் என்று அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் திராவிடர் கழக மாநில அமைப்பாளர் குணசேகரன், பொதுச் செயலாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் மதிவதனி, தி.மு.க. நிர்வாகி ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பாளர் காமராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்