தேனி
பஞ்சமி நிலத்தில் குடியேறும் போராட்டம்
|தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டியில் உள்ள பஞ்சமி நிலத்தில் குடியேறும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டியில் உள்ள பஞ்சமி நிலத்தில் குடியேறும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டத்தின்போது, காமக்காபட்டியில் உள்ள பஞ்சமி நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த நிலத்தை மீட்டு உரியவர்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரியகுளம் தாசில்தார் அர்ச்சுனன், தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 15 நாட்களில் நிலத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்ைத கைவிட்டு கலைந்து சென்றனர்.