< Back
மாநில செய்திகள்
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 607 வழக்குகளுக்கு தீர்வு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 607 வழக்குகளுக்கு தீர்வு

தினத்தந்தி
|
10 Sept 2023 12:47 AM IST

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 607 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கோர்ட்டுகளில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பல்கீஸ் தலைமை தாங்கினார்.

இதில் தலைமை குற்றவியல் நடுவர் மூர்த்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜமகேஸ்வர் ஆகியோர் முதலாவது குழுவாகவும், சார்பு நீதிபதி அண்ணாமலை, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மகாலெட்சுமி ஆகியோர் 2-வது குழுவாகவும், குற்றவியல் வழக்குகளுக்கு குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் சுப்புலெட்சுமி, சங்கீதா சேகர் மற்றும் குன்னம், வேப்பந்தட்டை ஆகிய கோர்ட்டுகளில் பணியில் உள்ள நீதிபதிகளை கொண்ட தலா ஒரு குழுவாக அமைக்கப்பட்டும் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதியுடன் ஒரு வக்கீல் குழு அமைக்கப்பட்டும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்ட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில், வங்கி வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், சிறு குற்றவியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள் என 607 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே 95 லட்சத்து 91 ஆயிரத்து 350-க்கு தீர்வு காணப்பட்டது. தீர்வு பெறப்பட்ட வழக்கின் மனுதாரர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி பல்கீஸ் இழப்பீடு தொகைக்கான ஆணைகளை வழங்கினார். இதில் வக்கீல்கள், போலீசார், நீதிமன்ற ஊழியர்கள், மனுதாரர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகர் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்