திருச்சி
மக்கள் நீதிமன்றத்தில் 234 வழக்குகளுக்கு சமரச தீர்வு
|மக்கள் நீதிமன்றத்தில் 234 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி கே.பாபு மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், 'தற்போது லட்சக்கணக்கான வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. குடும்ப நல கோர்ட்டிலும் விவாகரத்து உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. குடும்பத்தில் விட்டு கொடுக்கும் மனப்பான்மை குறைய, குறைய வழக்குகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. கணவன்-மனைவி இடையே உள்ள அனைத்து பிரச்சினைகளையும் கோர்ட்டில் அமர்ந்து பேச முடியாது. ஆனால் கூடுமானவரை சமரச தீர்வை எட்டும் வகையில் பேசி தீர்வு காண வேண்டும்' என்றார்.நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதிகள், மூத்த வக்கீல்கள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்சி நீதிமன்றங்களில் 1 அமர்வும், மணப்பாறை, துறையூர், முசிறி, லால்குடி ஆகிய நீதிமன்றங்களில் தலா 1 அமர்வும் என மொத்தம் 5 அமர்வுகளில் பல்வேறு வகையான வழக்குகளுக்கு சமரச தீர்வு காண கொண்டு வரப்பட்டன. இதில் மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், குடும்ப நல வழக்குகள், உரிமையியல் சம்பந்தமான வழக்குகள், தொழிலாளர் இழப்பீட்டு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் வங்கி வாரா கடன் வழக்குகள் என மொத்தம் 523 வழக்குகளுக்கு சமரச தீர்வு காண விசாரணைக்கு ஏற்கப்பட்டது. இதில் 234 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் உரியவர்களுக்கு ரூ.4 கோடியே 4 லட்சத்து 84 ஆயிரத்து 23 இழப்பீடாக பெற்று தரப்பட்டது. மக்கள் நீதிமன்றத்துக்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சோமசுந்தரம் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.