பெரம்பலூர்
சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 22 வழக்குகளுக்கு தீர்வு
|சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 22 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பல்கீஸ் தலைமை தாங்கினார். சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட 2 அமர்வுகளில், ஒரு அமர்வில் பெரம்பலூர் தலைமை குற்றவியல் நடுவர் மூர்த்தியும், குற்றவியல் நடுவர் எண்-2 சங்கீதா சேகரும் அமர்ந்து, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி முடித்தனர். 2-வது அமர்வில் ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணையன் மற்றும் மூத்த வக்கீல் காமராசு அமர்ந்து வங்கி வாராக்கடன் வழக்குகளை எடுத்து சமரசமாக பேசி முடித்தனர்.
சிறப்பு மக்கள் நீதிமன்றத்துக்கு 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டதில், 22 வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது. மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகளுக்கு இழப்பீடு தொகையாக ரூ.59 லட்சத்து 5 ஆயிரத்து 400-க்கான காசோலைகள், காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் பெரம்பலூர் சார்பு நீதிபதி அண்ணாமலை, வக்கீல்கள், வழக்காடிகள், காப்பீடு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகர் செய்திருந்தார்.