< Back
மாநில செய்திகள்
மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 224 வழக்குகளுக்கு தீர்வு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 224 வழக்குகளுக்கு தீர்வு

தினத்தந்தி
|
11 Feb 2023 7:00 PM GMT

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 224 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி நேற்று மாநிலம் முழுவதும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதையொட்டி நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள், மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் வாகன விபத்துகளில் இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கி வராக்கடன்கள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள் என சுமார் 2 ஆயிரத்து 500 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

மேலும் அந்த வழக்குளில் தொடர்புடைய இருதரப்பினரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர். இதையடுத்து திண்டுக்கல், பழனி, வேடசந்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 இடங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. ஒவ்வொரு வழக்கிலும் தொடர்புடைய இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்மூலம் வழக்குகளில் சுமூக தீர்வு காணப்பட்டது.

2,224 வழக்குகள் தீர்வு

இதில் திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்துக்கு முதன்மை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் தலைமை தாங்கினார். மேலும் தீர்வு காணப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீட்டுக்கான உத்தரவை வழங்கினார்.

இதில் கூடுதல் மாவட்ட நீதிபதி சரவணன், மகிளா கோர்ட்டு நீதிபதி சரண், வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிபதி ஜான்மினோ, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், நீதிபதியுமான பாரதிராஜா மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 224 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தீர்வு தொகையாக ரூ.13 கோடியே 15 லட்சத்து 9,379 வழங்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்