< Back
மாநில செய்திகள்
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,567 வழக்குகளுக்கு தீர்வு
அரியலூர்
மாநில செய்திகள்

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,567 வழக்குகளுக்கு தீர்வு

தினத்தந்தி
|
10 Sept 2023 12:36 AM IST

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,567 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தாமரைக்குளம்:

தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் அரியலூர் ஒருங்கிணைந்த ேகார்ட்டு, செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நேற்று அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் ஜெயங்கொண்டம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இந்த நீதிமன்றத்தினை முதன்மை அமர்வு நீதிபதியும், அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான கிறிஸ்டோபர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அரியலூர் குடும்ப நல நீதிபதி செல்வம் மற்றும் தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் சரவணன் ஒரு அமர்விலும், முதன்மை குற்றவியல் நடுவர் அறிவு மற்றொரு அமர்விலும் கலந்து கொண்டனர். அரியலூர் வழக்கறிஞர் சங்க தலைவர் மனோகரன் மற்றும் பல வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

தீர்வு

ஜெயங்கொண்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் லதா, கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ் மற்றும் நீதித்துறை நடுவர் ராஜசேகர் ஆகியோர் அமர்வில் கலந்து கொண்டனர். செந்துறையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆக்னேஷ் ஜெப கிருபா மற்றும் வழக்கறிஞர் சேகர் ஆகியோர் அமர்வில் கலந்து கொண்டனர்.

இதில் மொத்தம் 5,078 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதில் 2 காசோலை வழக்கிற்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரமும், 19 சிவில் வழக்குகளுக்கு ரூ.47 லட்சத்து 85 ஆயிரத்து 344-ம், 11 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு ரூ.42 லட்சத்து 8 ஆயிரமும், 707 சிறு குற்ற வழக்குகளுக்கு ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்து 950-ம், ஒரு குடும்ப பராமரிப்பு வழக்கில் ரூ.2 லட்சமும், 3 குடும்ப வன்முறை வழக்குகளில் ரூ.3 லட்சத்து 80 ஆயிரமும், ஜெயங்கொண்டம் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான 596 வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது.

வங்கி வழக்குகள்

தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வழக்குகளுக்கான அமர்வில் மாவட்ட சட்டப்பணி ஆணை குழுவின் செயலாளர் அழகேசன் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கலந்து கொண்டனர். இதில் 228 வழக்குகளில் ரூ.2 கோடியே 20 லட்சத்து 15 ஆயிரத்து 200-க்கு தீர்வு காணப்பட்டது. இதன்படி மொத்தம் 1,567 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் அரசு வக்கீல்கள், அரசு அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்