பெரம்பலூர்
சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 12 வழக்குகளுக்கு தீர்வு
|பெரம்பலூரில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 12 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பல்கீஸ் தலைமை தாங்கினார். மேலும் அவர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழுவில் பெரம்பலூர் சார்பு நீதிபதி அண்ணாமலை, மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜமேஷ்வர் குழு உறுப்பினர்களாக செயல்பட்டு சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் நீதிமன்றங்களில் உள்ள வருவாய்த்துறை, மோட்டார் வாகன விபத்து வழக்குகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டன. மேலும் வழக்காடிகள், எதிர் வழக்காடிகள் வரவழைக்கப்பட்டு இரு தரப்பு வக்கீல்கள் முன்னிலையில் பேசி 12 வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது.
இதில் மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட இழப்பீட்டு தொகை மொத்தம் ரூ.2 கோடியே 15 லட்சத்து 11 ஆயிரத்து 914-க்கான உத்தரவுக்கான ஆணைகளை முதன்மை மாவட்ட நீதிபதி பல்கீஸ் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகர் செய்திருந்தார்.