< Back
மாநில செய்திகள்
வீட்டு கொட்டகைக்கு தீ வைப்பு; மொபட்-தானியங்கள் எரிந்து நாசம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

வீட்டு கொட்டகைக்கு தீ வைப்பு; மொபட்-தானியங்கள் எரிந்து நாசம்

தினத்தந்தி
|
6 July 2022 12:23 AM IST

வீட்டு கொட்டகைக்கு தீ வைக்கப்பட்டதில் மொபட்-தானியங்கள் எரிந்து நாசமானது.

கொட்டகை தீப்பற்றி எரிந்தது

பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் 3-வது வார்டு மேற்கு தண்ணீர்தொட்டி தெருவை சேர்ந்தவர் நீதி (வயது 50). விவசாயி. இவரது மனைவி லட்சுமி(47). இவர்களது மகன் பிரபாகரன்(34), மகள் பிரியா(33). இதில் பிரியாவுக்கு திருமணமாகி கூகையூரில் தனது கணவர் முருகனுடன் வசித்து வருகிறார். அ.தி.மு.க. வார்டு செயலாளராக உள்ள பிரபாகரனுக்கு திருமணமாகி பெற்றோருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் பிரபாகரன் அவரது மனைவியுடன் களரம்பட்டிக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் நீதி, லட்சுமி ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் நீதியின் வீட்டையொட்டி முன்புறம் கல்நார் வேயப்பட்டு அமைக்கப்பட்டிருந்த கொட்டகை தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து கண் விழித்த நீதி, கொட்டகை கொழுந்துவிட்டு எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரும், லட்சுமியும் உடனடியாக வீட்டின் பின்புற வாசல் வழியாக வெளியேறி உயிர் தப்பினர்.

போலீசார் விசாரணை

மேலும் இது பற்றி பெரம்பலூர் போலீசாருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் கொட்டகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட், அரிசி மற்றும் தேங்காய் மூட்டைகள், மாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த தீவன மூட்டைகள் மற்றும் மின் மீட்டர்கள், வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.

மேலும் அந்த ெகாட்டகை அருகே இருந்த கிருஷ்ணசாமி (72) என்பவரின் மாட்டு கொட்டகைக்கும் தீ பரவியது. இதில் கொட்டகையின் ஒருபகுதி தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இதையடுத்து கிராம மக்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டு, மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், இரவு பணியில் இருந்து நெடுஞ்சாலை கண்காணிப்பு மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தது தெரியவந்தது.

முன்விரோதத்தில் தீ வைக்கப்பட்டதா?

லாடபுரத்தில் கடந்த மாதம் மருந்துக்கடை உரிமையாளர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு, தீ வைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. விவசாயி ஒருவரின் வெங்காய கொட்டகைக்கு தீ வைக்கப்பட்டது. இந்த நிலையில் வீட்டின் முன்புற கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் தொடர்ந்து, லாடபுரத்தில் பெரம்பலூர் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

மேலும் இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருதரப்பினர் மோதல் சம்பவத்தை தொடர்ந்து முன்விரோதம் காரணமாக கொட்டகைக்கு தீ வைக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்