ராமநாதபுரம்
"இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கும் அதிநவீன செயற்கைக்கோளை இந்தியா ஏவுகிறது"
|இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கும் அதிநவீன நைஸா செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் ஏவுகிறது என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார்.
ராமேசுவரம்,
இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கும் அதிநவீன நைஸா செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் ஏவுகிறது என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார்.
அப்துல்கலாம் வீடு
ராமேசுவரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டிற்கு நேற்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தனது மனைவியுடன் வருகை தந்தார். பின்னர் அவர் கலாமின் குடும்பத்தினருடன் உரையாடினார். அவரை அப்துல்கலாமின் பேரன் ஷேக் சலீம், அண்ணன் மகள் நசீமா மரைக்காயர், ஜெயினுலாபுதீன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் முரளிதரன் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' புத்தகமானது கலாம் குடும்பத்தினர் சார்பாக சிவனுக்கு நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பவுண்டேசன் சார்பில் மாணவர்களுடனான கலந்துரையாடலிலும் சிவன் கலந்துகொண்டார்.
முன்னோடி இந்தியா
ராமநாதபுரம், பாம்பன், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த மாணவர்களின் விண்வெளி சார்ந்த கேள்விகளுக்கு சிவன் பதில் அளித்தார்.
அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் லட்சிய கனவுகளை மாணவர்களிடம் எடுத்துரைக்க ஆசைப்படுகிறேன். கலாம் எதிர்பார்த்த இந்தியா, 'ஒரு முன்னோடி இந்தியா'. அதே கனவுதான் பிரதமர் நரேந்திர மோடியிடமும் உள்ளது. இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் அது இளைஞர்கள் கையில்தான் உள்ளது.
நைஸா செயற்கைக்கோள்
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து 'நைஸா' என்ற அதிநவீன செயற்கைக்கோளை உருவாக்கி வருகிறது. இந்த செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இந்த நைஸா செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட பின்னர் உலகத்தில் உள்ள தட்பவெப்ப நிலை, பூகம்பம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.
இந்த நைஸா செயற்கைக்கோள் இந்தியாவிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். இந்த செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படலாம். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இஸ்ரோவும் நாசாவும் இணைந்து இந்த செயற்கைக்கோளை உருவாக்கி வந்தாலும் இந்த செயற்கைக்கோள் இந்தியாவில் இருந்துதான் விண்ணில் ஏவப்படும். அப்படித்தான் ஒப்பந்தமும் போடப்பட்டு உள்ளது.
தன்னிறைவு
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டமான ககன்யான் விண்கலத்தை விண்ணில் ஏவ தற்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகள் முடிந்த பின்பு முதலாவதாக ஆளில்லாத விண்கலம் இரண்டு முறை விடப்பட்டு சோதனை செய்யப்படும். அதன்பின்னர் மனிதர்களுடன் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி ஏவுதளம் அமைய உள்ள இடம் மிக சிறப்பான ஒரு இடம். இதற்கு முதலில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். முன்பு வெளிநாட்டில் இருந்து கொடுக்கக்கூடிய செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொண்டிருந்தோம். தற்போது தன்னிறைவை அடையக்கூடிய காலகட்டம். நாம் தன்னிறைவு அடைந்துவிட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.