'சேது சமுத்திர திட்டம் தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பயனுள்ள திட்டமாக அமையும்' - ஜி.கே.வாசன்
|சேது சமுத்திர திட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்திய கடல்வழி போக்குவரத்துக்கும் பயனுள்ளதாக அமையும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.
இந்த நிலையில் சேது சமுத்திர திட்டத்தை தொடர்வதற்கும், முடிப்பதற்கும் மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"சேது சமுத்திர திட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய கடல்வழி போக்குவரத்துக்கும் பயனுள்ளதாக, பாதுகாப்பானதாக அமையும்.குறிப்பாக தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மிக்க பயனுள்ள திட்டமாக அமையும்.
தற்போது இத்திட்டம் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தினை தொடர்வதற்கும், முடிப்பதற்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் என்ற முறையிலும், த.மா.கா. சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.