தேனி
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் 15-ந்தேதி கடைசி நாள்
|நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் ஆர்வமும், திறனும் கொண்ட பயனாளிகளுக்கு சிறிய அளவிலான பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கி, தேவையான கோழி, கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு, 4 வார குஞ்சுகள் வளர்க்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றுக்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியமாக ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 875 வழங்கப்படவுள்ளது.
பயன்பெற விரும்பும் கிராமப்புற பயனாளிகள், மீதமுள்ள 50 சதவீத பங்களிப்பை வங்கிக் கடன் மூலமாக அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும். பயனாளிகளுக்கு கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்த பகுதி மனித குடியிருப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி தொடர்புடைய கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் 30 சதவீதத்தினர் பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்துக்கு அருகே உள்ள அரசு கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வருகிற 15-ந்தேதி கடைசி நாள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.