தமிழகத்தில் தொடர் விடுமுறை எதிரொலி; சுற்றுலா தளங்களில் அதிகரித்த மக்கள் கூட்டம்
|தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
சென்னை,
தொடர் விடுமுறை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சுற்றுலா தளத்தில் குவிந்த மக்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இருப்பினும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் விடுமுறை நாட்களில் கூடுதல் படகுகளை இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
கொடைக்கானலில் வழக்கத்தை விட அதிக அளவில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதன் காரணமாக பிரதான மலைப்பாதை நுழைவாயில் சோதனைச்சாவடி முதல் கொடைக்கானல் நகர்ப்பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தஞ்சை பெரிய கோவிலுக்கு காலை முதல் அதிக அளவிலான பொதுமக்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். அதோடு கோவிலின் கட்டிடக் கலை மற்றும் அங்குள்ள சிற்பங்களின் கலை நுணுக்கங்களைக் கண்டு ரசித்தனர்.
சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமான ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள், அங்குள்ள சுற்றுலா தளங்களைக் கண்டு ரசித்தும், தங்கள் குடும்பத்தினரோடு படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஏற்காட்டில் தங்கும் விடுதிகள் நிரம்பியுள்ளன.