< Back
மாநில செய்திகள்
தொடர் விடுமுறை எதிரொலி: வண்டலூர் உயிரியல் பூங்காவில் குவிந்த பார்வையாளர்கள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

தொடர் விடுமுறை எதிரொலி: வண்டலூர் உயிரியல் பூங்காவில் குவிந்த பார்வையாளர்கள்

தினத்தந்தி
|
2 Oct 2023 6:53 AM GMT

தொடர் விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் குவிந்தனர். மாமல்லபுரத்திலும் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.

வண்டலூர் உயிரியல் பூங்கா

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 170 வகைகளை சேர்ந்த 1977 வனவிலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு, திங்கட்கிழமை என தொடர்ந்து விடுமுறை என்பதால் நேற்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பார்வையாளர்கள் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் குவிந்தனர். இதனால் வண்டலூர் உயிரியல் பூங்கா நுழைவுவாயில் மற்றும் பூங்காவுக்குள் எங்கு பார்த்தாலும் பார்வையாளர்கள் கூட்டம் அலை மோதியது. பூங்காவுக்கு வந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் பூங்காவில் உள்ள மனித குரங்கு, வெள்ளை புலி, யானை, சிங்கம், மயில், பறவைகள் போன்றவற்றை பார்த்து ரசித்தனர்.

வெறிச்சோடிய மரப்பூங்கா

வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கொளப்பாக்கம் என்ற இடத்தில் தமிழக அரசின் சார்பில் 8 ஹெக்டேர் பரப்பளவில் மரபியல் மரப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் கிழக்கு தொடர்ச்சி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படும் 300-க்கும் மேற்பட்ட மூலிகைத் தன்மை வாய்ந்த மர தாவரங்கள் வளர்க்கப்படுகிறது.

இந்த பூங்காவை பொதுமக்கள் இலவசமாக பார்த்து ரசிக்கலாம். தொடர் விடுமுறை என்பதால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. ஆனால் அதன் அருகிலே மிக முக்கியமான மூலிகை மரங்கள் அடங்கிய மரப் பூங்காவை இலவசமாக சுற்றி பார்க்க பொதுமக்கள் யாரும் வராததால் மரப்பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.

மாமல்லபுரத்தில் குவிந்தனர்

இதேபோல் மாமல்லபுரத்திலும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வெயில் கடுமையாக வாட்டி வதைத்ததால் வெப்பத்தை தணிக்க சுற்றுலா பயணிகள் பலர் கடலில் குளித்து மகிழ்ந்தனர். பல பயணிகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கடற்கரை கோவில் வளாகத்தில் உள்ள மர நிழலில் அமர்ந்து ஓய்வு எடுத்தனர்.

புராதன சின்ன பகுதிகளில் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் போன்ற புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது. பலர் குடும்பம், குடும்பமாக கட்டுசோற்றை கட்டி வந்து மர நிழலில் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். புராதன சின்னங்கள் முன்பு பலர் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் நேற்று சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரம் கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்