தேனி
தொடர் விடுமுறை எதிரொலி: கும்பக்கரை, சுருளி அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்: உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்
|தொடர் விடுமுறை எதிரொலியாக, கும்பக்கரை, சுருளி அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவிகளில் உற்சாகமாய் குளித்து மகிழ்ந்தனர்.
கும்பக்கரை அருவி
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்து உள்ளது. இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். கடந்த 2 மாதங்களுக்கு ேதனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் மழை குறைந்ததால் அருவிக்கு நீர்வரத்து சீரானது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆயுத பூஜை மற்றும் பள்ளிகளில் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள்
இந்த தொடர் விடுமுறை எதிரொலியாக தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை ேசர்ந்த சுற்றுலா பயணிகள் அருவிக்கு வாகனங்களில் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் அருவியில் குடும்பத்துடன் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர். இதற்கிடையே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் அருவியில் கவனமாக குளிக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி சிறந்த சுற்றுலா, புண்ணிய தலமாக விளங்குகிறது. ஹைவேஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த மலைப்பகுதி வழியாக பல்வேறு மூலிகை செடிகளில் கலந்து இங்கு அருவியாக கொட்டுகிறது. தற்போது அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அவர்கள் குடும்பத்துடன் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.