< Back
மாநில செய்திகள்
செப்பறை அழகியகூத்தர் கோவில் ஆனி தேரோட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

செப்பறை அழகியகூத்தர் கோவில் ஆனி தேரோட்டம்

தினத்தந்தி
|
24 Jun 2023 7:51 PM GMT

ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோவில் ஆனி தேரோட்டம் நேற்று நடந்தது.

அழகிய கூத்தர் கோவில்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோவிலும் ஒன்றாகும். தாமிரபரணி நதிக்கரையின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலில் மூலவராக நெல்லையப்பா்- காந்திமதி அம்பாள் அருள்பாலித்து வருகின்றனா். இங்குள்ள நடராஜா் சன்னதி தாமிரசபை என்று அழைக்கப்படுகின்றது. மகாவிஷ்ணு, அக்னிபகவான், அகத்தியர், வாம தேவரிஷி, மணப்படை வீடு அரசன் ஆகியோருக்கு நடராஜபெருமான் தனது நடன தரிசனம் கொடுத்த சிறப்புடையதாகும்.

அழகியகூத்தர் பெருமானுக்கு ஆனித்திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் சிறப்பு வழிபாடுகள், சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது.கடந்த 22-ந்தேதி அழகியகூத்தர் நடராஜ பெருமான் தாமிரசபையில் இருந்து திருவிழா மண்டபத்திற்கு எழுந்தருளல் நடைபெற்றது. தொடா்ந்து சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை சாத்தி தாிசனம் நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 9-ம் திருநாளான நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து விழா மண்டபத்தில் அழகிய கூத்தருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் சுவாமி செப்பு கேடய சப்பரத்தில் தேருக்கு எழுந்தருளினார். அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான சிவபக்தர்கள் பஞ்சவாத்தியம் வாசித்தவாறு, வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். 4 ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. பல்வேறு கிராமங்களில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சன விழா, 10-ம் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்