'பிரிவினைவாத எண்ணங்களே திராவிட அரசியலின் அடித்தளம்' - ஆ.ராசா பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்
|நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நாடு பிளவுபட வேண்டும் என்று தி.மு.க. விரும்புவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "இந்தியா ஒருபோதும் ஒரு நாடாக இருந்ததில்லை. ஒரு நாடு என்றால் ஒரே மொழி, ஒரே பாரம்பரியம், ஒரே கலாச்சாரத்தைக் கொண்டிருக்க வேண்டும். இந்தியா ஒரு நாடு அல்ல, இது ஒரு துணைக் கண்டம்" என்று கூறியிருந்தார்.
இதற்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், ஆ.ராசாவின் கருத்துடன் நாங்கள் உடன்படவில்லை என தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பிரிவினைவாத எண்ணங்களே திராவிட அரசியலின் அடித்தளம் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"கற்பனையான சூழ்நிலைகளை உருவாக்குவதும், பிரிவினைவாத எண்ணங்களால் மக்களின் மனதில் நஞ்சூட்டுவதும் திராவிட அரசியலின் அடித்தளமாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நாடு பிளவுபட வேண்டும் என்று 'இந்தியா' கூட்டணியின் உறுப்பினரான தி.மு.க. விரும்புகிறது.
1963-ல் புதைக்கப்பட்ட தி.மு.க.வின் பிரச்சாரம் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நமது நாட்டை உடைக்க வெளிநாட்டு ஏஜெண்ட்டுகளின் கைப்பாவையாக செயல்படும் 'இந்தியா' கூட்டணியின் தீவிர முயற்சிகளை வன்மையாக கண்டிக்கிறோம்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.