கமலாலயத்தில் பாஜக எம்பி, எம்எல்ஏக்களுக்கு தனி அறைகள் - அண்ணாமலை
|பாஜக எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அறைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
மத்திய அமைச்சர் எல்.முருகன், மற்றும் பாஜக எம்.எல்.ஏக்களுக்கு அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அறைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"சென்னை தியாகராய நகரில் அமைந்திருக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். சிலர் குறைகளுடன், அரசின் நலத்திட்ட உதவி பெற மற்றும் புதிதாக பல சிந்தனைகளை அரசிடம் எடுத்து செல்லும் நோக்கில் என வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும்.
தொகுதிக்கு அப்பாற்பட்டு நமது மாநிலத்தின் நலனுக்காகவும் பலமுறை நமது சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்துள்ளனர். நமது மத்திய இணை அமைச்சர் பாராளுமன்றத்தில் தமிழக மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறார். இவற்றை கருத்தில் கொண்டு நமது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மற்றும் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், காந்தி மற்றும் சி.கே.சரஸ்வதி ஆகியோருக்கு நமது தலைமை அலுவலகத்தில் அறைகள் வழங்கப்பட்டுள்ளது.
நமது பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து தங்கள் குறைகளுக்கு தீர்வு காண விரும்பும் மக்கள் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தின் செயலாளர் சந்திரனை தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். சந்திரன் தொலைபேசி எண் +919445354922."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.