முதல் அமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம்: சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றம்
|10 மசோதாக்கள் தொடர்பாக முதல் அமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சென்னை,
தமிழக கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக, தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று (நவ.18) காலை கூடியது. அவை கூடியவுடன் சபாநாயகர் அப்பாவு மறைந்த முக்கியப் பிரமுகர்கள், முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானங்களை வாசிக்க அவை உறுப்பினர்கள் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் முதல் அமைச்சர் ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றும் வகையில் தீர்மானத்தை அவர் கொண்டுவந்தார். அப்போது பேசிய முதல் அமைச்சர், "எனது உடல் நலனைவிட மாநில மக்களின் நலனே முக்கியம். இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது. மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது கவர்னரின் கடமை" என்று பேசினார்.
முதல் அமைச்சர் பேசியதை அடுத்து சபாநாயகர் அப்பாவு, தீர்மானத்தின் மீது பேசலாம் என்று சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அனுமதியளித்தார். இதையடுத்து அவையில் உறுப்பினர்கள் பேசினர். தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது. மீன்வள பல்கலைக்கழகத்திற்கு பெயர் மாற்றம் செய்ததாக குற்றம் சாட்டி அதிமுகவும் வெளிநடப்பு செய்தது. பிறகு இந்த மசோதா அவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.