ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
|ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
பெரம்பலூர்,
தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று மாலை கட்சியினருடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தந்தை பெரியாருடைய கொள்கையை நினைவேந்துகிற வகையில், அவரது பகுத்தறிவு கொள்கைகளை பிரசாரம் செய்வதற்கான சட்டத்தை ஏற்கனவே வேறு பல மாநிலங்கள் நிறைவேற்றி இருக்கின்றன. அதேபோல் தமிழகத்திலும் பகுத்தறிவு கொள்கைகளை நிலை நிறுத்துகிற ஒரு சட்டத்தை தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
தற்போதும் சாதி மறுப்பு திருமணங்கள் நடைபெறுகிறபோது, ஆணவ கொலைகளும் அடுக்கடுக்காக தொடர்கிற சம்பவங்கள் நடக்கின்றன. எனவே தமிழகத்திலே ஆணவ கொலைகளை தடுப்பதற்காக தனி சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், என்றார்.