தனியார் ஆஸ்பத்திரியில் செந்தில்பாலாஜி சிகிச்சை பெற அனுமதி -ஐகோர்ட்டு உத்தரவு
|தனிநபர் உயிர் சம்பந்தப்பட்டது என்பதால், தனியார் ஆஸ்பத்திரியில் செந்தில்பாலாஜி சொந்த செலவில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
அமைச்சர் செந்தில்பாலாஜியை, மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
மேலும், செந்தில்பாலாஜி உடல்நிலை சரியில்லாததால், அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்றும் கூடுதல் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை, முதலில் நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. ஆனால், அதில் நீதிபதி ஆர்.சக்திவேல், இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று கூறி விசாரணையில் இருந்து விலகியதால், இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு ஏற்பு
அப்போது, மத்திய அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சிறப்பு வக்கீல் என்.ரமேஷ், மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கைது நடவடிக்கை மேற்கொள்ளும்போது, சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள விதிமுறையை பின்பற்றவில்லை என்று மனுதாரர் தரப்பில் கூறுவது சரியா? ஒரு வேளை மனுதாரர் கூறும் இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், செந்தில்பாலாஜியை கைது செய்தது முற்றிலும் தவறா? என்பதற்கு இந்த ஆட்கொணர்வு மனுவில் விடை காண வேண்டும்.
எனவே, இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம். இந்த மனுவுக்கு மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும்.
ரத்தக்குழாய்களில் அடைப்பு
மேலும், அதிகாலை 1.39 மணிக்கு செந்தில்பாலாஜியை கைது செய்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், அவரை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், செந்தில்பாலாஜிக்கு ரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது என்று சான்றிதழ் அளித்துள்ளனர். சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் வழக்கமான மருத்துவ பரிசோதனையை செந்தில்பாலாஜி மேற்கொண்டு வருவதால், அவருக்கு அதே ஆஸ்பத்திரியில் சொந்த செலவில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ கோரிக்கை விடுத்தார். இது உயிர் காக்கும் அறுவை சிகிச்சை என்பதால், கைதானவரின் விருப்பப்படி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது என்றும் அவர் கூறினார்.
தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
ஆனால் இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் எல்லா மருத்துவ வசதிகளும் இருக்கும்போது, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை என்ற பேச்சுக்கே இடமில்லை. செந்தில்பாலாஜி உடல்நிலை குறித்து ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி கொடுத்துள்ள மருத்துவ அறிக்கையில் மாற்றுக்கருத்து உள்ளது.
எனவே, அறுவை சிகிச்சை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமா, வேண்டாமா? என்பது குறித்து டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மூலம் அல்லது ஒரு டாக்டர்கள் குழுவை இந்த ஐகோர்ட்டு அமைத்து பரிசோதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், இந்த சூழ்நிலையில், அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கொடுத்துள்ள மருத்துவ அறிக்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. வேறு எந்த ஆதாரமும் இல்லாமல், அந்த அறிக்கை மீது சந்தேகமும் கொள்ள முடியாது.
தனிநபரின் உயிர் சம்பந்தப்பட்டது என்பதால், அந்த தனியார் ஆஸ்பத்திரியில் செந்தில்பாலாஜி சொந்த செலவில் சிகிச்சை பெற அனுமதி வழங்குகிறோம்.
டாக்டர்கள் குழு
ஆனால், அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிப்பதால், செந்தில்பாலாஜி பெறும் சிகிச்சையை ஆய்வு செய்ய டாக்டர்கள் குழுவை அமைத்து அமலாக்கத்துறை ஆய்வு செய்துகொள்ளலாம். செந்தில்பாலாஜியை சிகிச்சைக்காக காவேரி ஆஸ்பத்திரிக்கு மாற்ற வேண்டும். இந்த மனு மீதான விசாரணையை 22-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
இந்த உத்தரவை பிறப்பித்த பின்னர், கைதான 15 நாட்களுக்குள் குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். செந்தில்பாலாஜியை சிகிச்சைக்கு அனுப்புவதால், சிகிச்சைக்கு பின்னர் விசாரணைக்காக காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும். 15 நாட்கள் என்ற காலக்கெடுவை நீக்க வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை வருகிற 22-ந்தேதி நடைபெறும் விசாரணையின்போது பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.