செந்தில்பாலாஜி உடல்நிலை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
|மருத்துவ சீட் வரம்பு புதிய கல்லூரி வருவதற்கு தடையாகும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு செந்தில் பாலாஜிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. இன்று மாலைக்குள் நோய் பாதிப்பு மற்றும் சிகிச்சை குறித்த தகவல்கள் வெளிவரும். அதுவரை எதுவும் கூற இயலாது. செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் உள்ளார்" என்று கூறினார்.
அதனை தொடர்ந்து புதிய மருத்துவ பணியிடங்கள் குறித்து தேசிய மருத்துவ ஆணையம் அறிக்கை வெளியிட்ட விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,
மருத்துவ சீட் வரம்பு புதிய கல்லூரி வருவதற்கு தடையாகும். இந்த அறிவிப்பை செயல்படுத்தினால் தமிழகத்திற்கு புதிய மருத்துவ கல்லூரி வருவது தடைப்படும். தமிழ்நாட்டில் இன்னும் 6 மாவட்டங்களுக்கு மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.