செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி - சென்னை ஜகோர்ட்டு உத்தரவு
|வழக்கை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்டது.
இதையடுத்து 2-வது முறையாக அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இந்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று (புதன்கிழமை) காலை சென்னை ஐகோர்ட்டில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். 8 மாதங்களாக சிறையில் இருப்பதாக கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என கூறி ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். மேலும் இந்த வழக்கை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கை தினசரி அடிப்படையில் விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.