< Back
மாநில செய்திகள்
செந்தில்பாலாஜிக்கு சிறையில் கூடுதலாக எந்த சலுகையும் வழங்கப்படவில்லை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

செந்தில்பாலாஜிக்கு சிறையில் கூடுதலாக எந்த சலுகையும் வழங்கப்படவில்லை

தினத்தந்தி
|
25 July 2023 6:49 PM GMT

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிறையில் முதல் வகுப்பு கைதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், கூடுதலாக எந்த சலுகையும் வழங்கப்படவில்லை எனவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கவர்னரிடம் நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்கள் பற்றி புதிதாக எந்த தகவலும் வரவில்லை. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு உரிமை உள்ளது என்பதை வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்றத்தில் அரசு வக்கீல்கள் எடுத்து கூறுவார்கள்.

சிறைத்துறையில் முதல் வகுப்பு கைதிகளுக்கு என்ன சலுகை உண்டோ அது மட்டுமே அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வழங்கப்படுகிறது. கூடுதலாக யாருக்கும் எந்த சலுகையும் வழங்க முடியாது. கேண்டீனில் உணவு வாங்கி கொள்ள அனுமதி உண்டு. அதற்கு குறிப்பிட்ட தொகை வாரத்திற்கு ரூ.1,000 என்று அனுமதிக்கப்படுகிறது.

அந்த தொகையில் இருந்து தங்களுக்கு வேண்டிய உணவுகளை வாங்கி கொள்ளலாம். வெளியில் இருந்து எந்த உணவும் கொண்டு வர அனுமதிக்கப்படுவதில்லை. இன்று வரை அப்படி செய்யப்படுவது கிடையாது. அங்கு ஏ.சி. வசதி வைத்து கொடுக்க முடியாது. அமைச்சர் என்ற முறையிலோ அல்லது தி.மு.க.வை சேர்ந்தவர் என்ற முறையிலோ கூடுதலாக எந்த ஒரு சலுகையும் அவருக்கு வழங்கப்படவில்லை.

மேகதாது அணை விவகாரம்

இந்த வழக்கு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் சிறையில் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக ஒரு மாய தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார்கள். சிறைத்துறையில் அப்படி எதுவும் செய்யப்படுவதில்லை. நாங்கள் செய்யவும் மாட்டோம். அதற்கு முதல்-அமைச்சரும் அனுமதிக்க மாட்டார். மேகதாது அணை விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வார். நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் அகற்றப்படமாட்டாது, தற்போது உள்ள நிலையே தொடரும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வு என்பது ஆண்டுக்கு ஆண்டு குறிப்பிட்ட சதவீதம் உயர்வது இயற்கை தான். கடந்த 2 ஆண்டுகளில் எங்களது ஆட்சியில் விலைவாசி உயர்வு ஏறாமல் கட்டுக்குள் வைத்துள்ளோம். சிலர் பதுக்கலில் ஈடுபடுவதை கண்டறிந்து தடுத்து விலைவாசி உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கோடநாடு வழக்கு

ஜெயலலிதா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் நீதிமன்ற உத்தரவுபடி தான் கொடுக்கப்பட்டுள்ளது. கோடநாடு வழக்கில் விசாரணையை துரிதப்படுத்தக்கோரி ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் நடத்தட்டும்.

உண்மையான குற்றவாளிகளை அரசு விசாரணை செய்யும். யார் தவறு செய்திருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். எவ்வளவு உயர் பதவியில் இருந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்