< Back
மாநில செய்திகள்
புழல் சிறையில் செந்தில்பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதி
மாநில செய்திகள்

புழல் சிறையில் செந்தில்பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதி

தினத்தந்தி
|
15 Nov 2023 8:43 PM IST

மருத்துவமனை வளாகத்தில் வந்திறங்கிய செந்தில் பாலாஜி ஆம்புலன்சில் இருந்து சிரமப்பட்டு இறங்கினார்.

சென்னை,

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று மாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் சிறையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு இன்று மாலை அழைத்து வரப்பட்டார். மருத்துவமனை வளாகத்தில் வந்திறங்கிய செந்தில் பாலாஜி ஆம்புலன்சில் இருந்து சிரமப்பட்டு இறங்கினார்.

போலீஸ்காரர்கள் கைத்தாங்கலாக பிடித்தபடியே அவரை இறக்கிவிட்டனர். இதையடுத்து வீல் சேரில் அவர் மருத்துவமனைக்கு உள்ளே அழைத்து செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. எக்கோ, இதயம் சார்ந்த பல மருத்துவ பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கழுத்து வலிப்பதாக கூறியதால் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இதயம் மற்றும் கழுத்து வலிப்பதாக அவர் கூறிய நிலையில், அந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு மேல் சிகிச்சை தேவை என டாக்டர் பரிந்துரைத்தனர். இதையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்