செந்தில்பாலாஜி வழக்கு: சென்னை சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு
|செந்தில்பாலாஜிக்கு எதிராக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகலை வழங்க வேண்டும் என்று சென்னை சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை,
2011-16ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து கழகத்தில் பணி நியமனங்கள் பெற்றுத்தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு பணத்தை திரும்ப தராமல் மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் செந்தில்பாலாஜி மீது தனித்தனியாக 3 வழக்குகள் பதிவு செய்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த வழக்குகளில் செந்தில்பாலாஜி மீது சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்தநிலையில் செந்தில்பாலாஜிக்கு எதிராக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகல்களை கேட்டு சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயவேல், விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.